"மது போதையில் திருடுகிறார்கள்" - ஆடு வளர்ப்பவர்கள் வேதனை

ஆடு திருடர்களால்சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் ஆடு திருட்டு பாதிப்பு குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்
x
வெள்ளம், வறட்சி காலங்களில் விவசாயம் பாதிக்கப்படும் போது விவசாயிகள் மற்றும் பிற அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சக்கரம் சுழல அச்சாணியாக இருக்கிறது கால்நடை வளர்ப்பு. இதில் பெரும்பாலானோர் தேர்வு ஆடு வளர்ப்பாகவே இருக்கிறது. ஆடுகள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அவைகளை வளர்ப்பதும் எளிதான காரியமல்ல.  காலை முதல் இரவு வரையில் அவைகளை பராமரிப்பதற்கு ஆடு வளர்ப்பவர்கள் நேரம் செலவிட வேண்டும். வெயில், மழைக்கு மத்தியில் காட்டு மேட்டில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வளர்க்கும் ஒரு ஆட்டை விற்றால் 6 ஆயிரம் மூதல் 15 ஆயிரம் ரூபாய் வரையில் தங்களுக்கு கிடைக்கும் எனக் கூறும் விவசாயிகள், சமீபகாலமாக ஆடு திருடர்களால் தங்களுக்கு அந்த பயன் கிடைப்பது சவாலாகியிருக்கிறது என வேதனை தெரிவிக்கிறார்கள்.

இறைச்சி விலை அதிகரிக்கும் நிலையில், பல இளைஞர்கள் குடித்துவிட்டு ஆட்டை வாயை பொத்தி எளிதாக திருடி விற்று சம்பாதிக்கிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எளிதாக திருடிவிடலாம், சிக்கினால் தண்டனையும் குறைவு, சிக்கவில்லை என்றால் லாபம் என்பதால் எளிதாக கைவரிசையை காட்டிவிடுகிறார்கள் என்றும்  காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

தற்போது ஆடு திருடர்களால் திருச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இனியும் ஆடு திருட்டை மிக எளிதான விஷயமாக எடுக்க கூடாது என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆடு திருட்டு வழக்குகளை விசாரிக்கவும், திருட்டை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த உத்தரவு ஆடு வளர்ப்போருக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்