சொத்து பிரச்சினையால் நடந்த பயங்கர சம்பவம் - அண்ணன் தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி
திருவண்ணாமலை அருகே சொத்துக்காக தன் அண்ணனை தம்பியே கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
திருவண்ணாமலை அருகே சொத்துக்காக தன் அண்ணனை தம்பியே கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் என 3 மகன்கள். இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வந்தார். திருமணமான இவர் தன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரின் சகோதரர்களான ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரில் பூர்வீக சொத்து உள்ள நிலையில் அதை 3 பேருக்கு பங்கு பிரித்து கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் புருஷோத்தமனுக்கு சொத்தில் பங்கு தருவதாக கூறி 7 லட்ச ரூபாயில் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை தம்பியான ராஜசேகர் தந்துள்ளார். ஆனால் மீதமுள்ள தொகையை தம்பி ராஜசேகர் தராமல் இருக்கவே, அண்ணன், தம்பிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. இந்த சூழலில் சம்பவத்தன்றும் மோதல் வெடித்ததால் ஆத்திரமடைந்த ராஜசேகர், அண்ணன் புருஷோத்தமன் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு ராஜசேகர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் தீயில் கருகி அலறல் சத்தத்துடன் எழுந்து மாடியில் இருந்து ஓடி வந்த புருஷோத்தமனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் புருஷோத்தமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணனை கொலை செய்தததாக தம்பி ராஜசேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story