ஜெர்மனி பெண்ணிடம் பணம் பறித்ததாக புகார்; "வீடியோ கால் ஆதாரங்கள் உள்ளன" - நடிகர் ஆர்யா மீது மீண்டும் குற்றச்சாட்டு

ஜெர்மனியை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட வழக்கில், கைதான 2 பேரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
ஜெர்மனி பெண்ணிடம் பணம் பறித்ததாக புகார்; வீடியோ கால் ஆதாரங்கள் உள்ளன - நடிகர் ஆர்யா மீது மீண்டும் குற்றச்சாட்டு
x
ஜெர்மனியை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட வழக்கில், கைதான 2 பேரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. ஜெர்மனியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், இணையம் வாயிலாக தன்னிடம் பழகிய நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்ச ரூபாய் பணம் பறித்து ஏமாற்றினார் என சர்ச்சையை கிளப்பியது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2018ல் இருவரும் பழகி வந்த நிலையில் ஆர்யாவுக்கு உன்னையே திருமணம் செய்து வைப்பதாக ஆர்யாவின் தாய் கூறியதாகவும், அதை நம்பி 70 லட்ச ரூபாய் பணத்தை பல தவணைகளில் கொடுத்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.இந்த நிலையில், நடிகர் ஆர்யா, 2019ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அந்த பெண் டாக்டர் போலீஸில் புகார் அளித்தார்.இந்த புகாருக்கு நடிகர் ஆர்யா தரப்பு எந்த வித பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில் புகார் அளித்த அந்த பெண்ணோ, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை கடந்த பிப்ரவரி மாதம் புகார் மனுவை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணையை கையில் எடுத்தனர். இதன்படி கடந்த 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆர்யாவிடம் விசாரணை நடந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 24 ஆம் தேதி ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கிற்கும் நடிகர் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அங்கே வந்திருந்த ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர்  ஆனந்தன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா, வீடியோ காலில் பலமுறை பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த மோசடியில் ஈடுபட்டது ஆர்யா தான் என்பதில் மாற்றமில்லை என்கிறார் அந்த பெண்ணின் வழக்கறிஞர் ஆனந்தன்.தன் பெயரில் ஆள் மாறாட்டம் நடந்தது என நடிகர் ஆர்யா இதுவரை புகார் அளிக்காதது ஏன்? என்றும் அந்த பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். 2018 முதல் நடிகர் ஆர்யா, பெண் டாக்டரிடம் பேசிய வாட்ஸ் அப் உரையாடல்கள் அனைத்தும் ஆதாரமாக உள்ளது என்றும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்த பெண் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நடிகர் ஆர்யா சந்தித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்