நடிகர் தனுஷ் வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கில் தொழில் குறித்த விவரங்களை மறைத்தது குறித்து மனுத்தாக்கல் செய்ய நடிகர் தனுஷ் தரப்புக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அவர் செலுத்த வேண்டிய வரி பாக்கியை கணக்கிட்டு, சமர்ப்பிக்க வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த தனுஷ், அந்த காருக்கான நுழைவு வரியான 60 லட்சம் ரூபாயை செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய 2015ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி பாக்கியை திங்கள் கிழமைக்குள் செலுத்தி விடுவதாகவும், வழக்கை வாபஸ் பெற  அனுமதிக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், வரி பாக்கியை செலுத்தி, வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் எனவும், அதை விடுத்து தற்போது வழக்கை வாபஸ் பெற கோருவதை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, தனுஷ் செலுத்த வேண்டிய வரி பாக்கியை கணக்கிட்டு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தெரிவிக்கும்படி, வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டார். 

மேலும், 2015ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தனது தொழில் குறித்த விவரங்களை தெரிவிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக, பிற்பகல் மனுத்தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு உத்தரவிட்டார். 2015 முதல் வரி பாக்கியை செலுத்தாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சாலையை பயன்படுத்தும் போது வரி செலுத்துவது பொறுப்புள்ள குடிமகனின் கடமை எனவும் தெரிவித்த நீதிபதி, பால் வியாபாரி பெட்ரோலுக்கு வரி செலுத்த முடியாது என வழக்கு தொடர்ந்துள்ளாரா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த மனு மீது பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்