தொழில்துறையில் கோலோச்சிய தமிழர்கள்! - தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள்...

கொடுமணலில் மீண்டும் தொடங்கியுள்ள அகழ்வாய்வில், படிக்கட்டுகளுடன் கூடிய பழங்கால கிணறு, இரும்புப் பட்டறை, மற்றும் கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளன...இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
x
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி என்ற பெருமை வெறும் வார்த்தை ஜாலங்களுக்காக மட்டுமல்ல என்பதை நிரூபிக்க, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரீகம் ஆர்ப்பாட்டமின்றி மண்ணில் உறங்கிக் கிடக்கிறது...ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தில், 1981ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பல்வேறு கட்ட அகழாய்வில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள், வணிகத்திலும் தொழில்துறையிலும் கோலோச்சியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன...கடந்த ஆண்டு மே மாதம் துவங்கிய தமிழக தொல்லியல் துறையின் 8வது கட்ட அகழாய்வுப் பணியில், தொழிற்கூடங்கள் இருந்ததற்கான அடையாளங்களும், ஆயிரக்கணக்கான பழங்காலப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன...தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன...அதில் ஏராளமான கலைப் பொருட்களும், பாசிமணிகளும் கிடைத்ததில் இருந்து, நம் முன்னோர்கள் கலைத் தொழிலிலும் சிறந்து விளங்கியது புலப்படுகிறது...அத்துடன் ஆற்றங்கரையோரங்களில், உருக்குப்பட்டறையில் அடுப்புகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் உள்ளிட்ட இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன...
இறந்தவர்களைப் புதைத்த 3 வகையான பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகளில் பல வடிவ பானைகளும், கூம்பு வடிவிலான குவளைகளும் கிடைத்துள்ளன...அத்துடன் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓட்டை டி.என்.ஏ பரிசோதனை செய்ய அதன் மீது சூரிய ஒளி விழாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது...தொழிற்கூடங்கள் இருந்த இடத்தில், இரு புறமும் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்று காணப்பட்ட நிலையில், அது 10 மீட்டர் நீள அகலத்தில், கிட்டத்தட்ட இரண்டறை மீட்டர் ஆழத்தில் பாறைகளைக் குடைந்து தோண்டியது என்று கண்டறியப்பட்டுள்ளது... கொடுமணல் பகுதியில் தற்போதைய அகழ்வாய்வில்,  கல்மணிகள், 662 உடைந்த பல வகையான வளையல்கள், முழுமையான 343 கல்மணிகள், மற்றும் தங்கம், இரும்பு, கண்ணாடி, தாமிரத்தில் செய்யப்பட்ட பல பொருட்களும் கிடைத்துள்ளன...அங்கு கிடைக்கப்பட்ட, குறியீடுகளுடன் கூடிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானை ஓடுகளில், அம, அமனன் என்ற பெயர்கள்  எழுதப்பட்டதில் இருந்து தமிழின் தொன்மை விளங்குகிறது...தமிழர் வரலாற்றின் வேர் நோக்கிய இந்தப் பயணத்தில், மண் மூடிப்போன நம் வரலாற்றைத் தோண்ட தோண்ட புலப்படும் பொக்கிஷங்கள், வரலாற்றைத் திருத்தி எழுதும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் நம்பிக்கை... 
தந்தி டிவி செய்திகளுக்காக செய்தியாளர் மகேஷ்வரன்.


Next Story

மேலும் செய்திகள்