ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலம் - உயிரிழந்த நபரின் தந்தை இஸ்ரோ விஞ்ஞானி

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தீயில் கருகிய நிலையில், மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் யார்? சம்பவத்தின் பின்னணி என்ன? பார்க்கலாம்...
x
இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று, சென்னை ஐ.ஐ.டி. இதனால், இங்கு தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநில மாணவ, மாணவியரும் படித்து வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு விளையாட்டு அதிகாரி ராஜூ நேற்று விளையாட்டு வீரர்களுடன் சென்றுள்ளார். அங்கு தீயில் கருகிய நிலையில், சடலம் ஒன்று இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே கிடந்த வாட்டர் பாட்டிலை பார்த்தபோது, அதில்தான் பெட்ரோல் கொண்டு வந்தது தெரியவந்தது.  அந்த நபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டிருக்கலாம் என கோட்டூர்புரம் போலீசார் கருதுகின்றனர்.  கருகிய நிலையில் விளையாட்டு மைதானத்தில் கிடந்த சடலம் யார் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர். இறந்து கிடந்த நபர், கேரள மாநிலத்தை சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்பதும், அவர் வேளச்சேரி பகுதியில் தங்கி இருந்து ஐ.ஐ.டி-யில் புராஜெக்ட் அசோசியேட்டாக பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கேரளாவில் பி-டெக் படிப்பை முடித்த உன்னி கிருஷ்ணன், கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்து ஐ.ஐ.டி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்துள்ளார்.  
வேளச்சேரியில் ஒரு வீட்டில் மூன்று மாணவர்களுடன் உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்து தனது பணியை செய்து வந்துள்ளார். அந்த வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்தபோது, கடிதம் ஒன்றை  கண்டெடுத்தனர். தொடர்  மன அழுத்தத்தால், தற்கொலை முடிவை எடுத்ததாக உன்னி கிருஷ்ணன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். உன்னிக்கிருஷ்ணனுக்கு என்ன பிரச்சினை, அவர் என்ன பகிர்ந்துகொண்டார், எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தார் போன்றவை குறித்து அவருடன் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த உன்னிக்கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உன்னிக்கிருஷ்ணனின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கான காரணத்தை அறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி பாகுபாடு நிலவுவதாக கடந்த காலங்களில்  எழுந்த குற்றச்சாட்டுகளாலும், அவ்வப்போது நிகழும் தற்கொலை சம்பவங்களாலும் சர்ச்சை எழுந்த நிலையில், உன்னிக்கிருஷ்ணனின் மரணம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்