ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வருகின்ற 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் என்றும், குளிர் சாதன வசதி இல்லாமல் கடைகள் செயல்படுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்து வகையில் சானிடைசர் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சலூன் மற்றும் அழகு நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20% பணியாளர்கள் அல்லது 10 பணியாளர்களுக்கு மட்டும் வைத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story