கொரோனா பரவலின் கோரத்தாண்டவம் எங்களை ஒன்றும் செய்யாது - நெக்னா மலை கிராம மக்கள்

கொரோனா பரவலின் கோரத்தாண்டவம் தங்களை ஒன்றும் செய்யாது என ஒரு கிராமமே தெம்பாக கூறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அப்படி சொல்வதன் காரணம் என்ன?
x
நாட்டையே உலுக்குப் போட்டிருக்கிறது, கொரோனா பரவலின் இரண்டாம் அலை. முதல் அலையைப் போல் அல்லாமல், இந்த முறை கிராமம் கிராமமாக தனது கொடுங்கரத்தை நீட்டியிருக்கிறது, கொரோனா.. இதில் திருப்பத்தூர் மாவட்டமும் விதிவிலக்கல்ல… 

ஆனால், இதே திருப்பத்தூர் மாவட்டத்தில், நெக்னா மலையின் மேல் இருக்கும் நெக்னா மலைகிராமத்தின் கதையோ வேறாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது, நெக்னா கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், 170க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

இருப்பினும், இதுவரையில் கொரோனா தொற்று, இந்த கிராமத்தில் எட்டி பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படாததே, இதற்கான காரணம் என இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் என அறிவிக்கும் அரசுத் தரப்பு, இங்கு தடுப்பூசி முகாமும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது… 

கொரோனா குறித்த பீதியில் உலகமே உறைந்திருக்கும் வேளையில், நெக்னா மலையில் அரசு நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது, வேதனையின் உச்சகட்டம். இதனால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி என எதையும் இந்த கிராம மக்கள் பின்பற்றுவதில்லை. 

அதேசமயம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் தங்களுக்கு பரிசோதனையோ, தடுப்பூசியோ தேவையில்லை எனக் கூறும் நெக்னா கிராம மக்கள், வீட்டு வாசலில் மாட்டுச் சாணமும், மஞ்சள் நீரும் தெளித்தாலே போதுமே என வெள்ளந்தியாக கூறுகிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாமை ஒருபுறம், அரசு நிர்வாகத்தின் அலட்சியம் மறுபுறம் என தனித்து விடப்பட்டிருக்கும் நெக்னா மலை கிராமத்தை, அரசு கருணை கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு… 

Next Story

மேலும் செய்திகள்