பப்ஜி மோகத்தில் முதியவரின் வங்கி கணக்கில் திருடிய சிறுவன் - சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை

பப்ஜி மோகத்தில், முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஏழரை லட்சத்தை திருடிய சிறுவனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பப்ஜி மோகத்தில் முதியவரின் வங்கி கணக்கில் திருடிய சிறுவன் - சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை
x
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மருத்துவர் முருகேசன். 75 வயதான இவரது வீட்டில், குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியுள்ள பெண் ஒருவர் உடனிருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில் முருகேசன், தான் செய்த பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து ஏழரை லட்சம் ரூபாய்  மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வங்கியில் விசாரித்த போது, ஆன்-லைனில் பொருள் வாங்கி இருப்பதாகவும், பப்ஜி விளையாட்டிற்கு பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த முருகேசன், அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாரிடம்  புகார் அளித்தார்.

அப்போது, ஆகஸ்ட் மாதத்தில் பணம் திருடப்பட்டது தெரியவர, பணம் சென்ற  கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில், 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, முருகேசனை கவனித்து கொண்டிருக்கும் பெண்ணின், மகன் பணத்தை திருடியது அம்பலமானது.

இதையடுத்து, சிறுவனிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.
 
மருத்துவர் முருகேசன் கடந்த மார்ச் மாதம், சிறுவனின் செல்போனை பயன்படுத்தி இணையவழி வங்கியை பயன்படுத்தியதாகவும், அப்போது, முருகேசனின் வங்கி தகவல்களை, சிறுவன் ​​செல்போனில் சேமித்து வைத்ததும் தெரிய வந்தது. 

பணத்தை திருடிய சிறுவன் ஆன்-லையில் செல்போன் உள்ளிட்ட பொருள் வாங்கியதுடன், பப்ஜி விளையாட்டில் மட்டும் ஆறரை லட்சம் ரூபாயை செலவழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வங்கி ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்வதுடன், தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தவிர மற்ற இடங்களில் இணைவழி வங்கி சேவை போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க 
வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்