மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் - சிறுமியின் மூச்சை அழுத்தி பிடித்து கொன்ற தந்தை

ராஜபாளையம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தந்தையே அவரை துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் - சிறுமியின் மூச்சை அழுத்தி பிடித்து கொன்ற தந்தை
x
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் பழனிகுமார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை இருந்தது. 

பிறக்கும் போதே குழந்தை மாற்றுத் திறனாளியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாளடைவில் அவருக்கு மகாலட்சுமி என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்துள்ளனர். 

ஆனால் வளர வளர சிறுமி மீதான பொறுப்புகளும் அதிகமானது... மேலும் அவரை விட்டு விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாத சூழல். உடன் அழைத்துச்  செல்லவும் முடியாமல் தவித்து வந்தனர் பெற்றோர். கூலித் தொழிலாளி​யான இவர்களின் வருமானம் குழந்தையின் மருத்துவ செலவுகளுக்கும் போதவில்லை என கூறப்படுகிறது..

இதனால் கணவன், மனைவி இருவரும் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். மேலும் இருவரும் கூலி வேலைக்கு செல்வதால் மகளை பார்த்துக் கொள்வதிலும் சிரமம் இருந்துள்ளது. இந்த சூழலில் தான் சம்பவத்தன்று தாய் ராமலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில், தந்தை பழனி குமார் தன் மகளின் அருகே வந்துள்ளார். 

தன் தந்தை தன்னிடம் பாசமாக பேச வருகிறார் என நிச்சயம் நினைத்திருப்பாள் அந்த சிறுமி. ஆனால் அவரோ, மகளுக்கு நிரந்தர விடை கொடுக்க வேண்டும் என நினைத்து, அவரின் மூச்சை பிடித்து அழுத்தியுள்ளார். இதில் துடிதுடித்து அடங்கிப் போனார் அந்த சிறுமி. 

பின்னர் தன் மகளை கொன்றதை ஒப்புக் கொண்ட அவர், காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வயதான முதியவரை பராமரிக்க இயலாத விரக்தியில் சேலத்தில் ஃப்ரீஸர் பெட்டியில் உயிருடன் வைத்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராஜபாளையத்தில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்