டிக் டாக் மோகத்தால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி - 16 வயதில் திருமணம் செய்து கொண்ட சோகம்

டிக் டாக்கில் அறிமுகமான இளைஞருடன் காதல், அவசர கதியில் திருமணம், அதே வேகத்தில் கருக்கலைப்பு என திசைமாறிய ஒரு சிறுமி இன்று தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் சோகத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
டிக் டாக் மோகத்தால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி - 16 வயதில் திருமணம் செய்து கொண்ட சோகம்
x
ராணிப்பேட்டை மாவட்டம்  செங்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். 19 வயதான இவர் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். வேலை நேரத்தை விட டிக் டாக் தான் இவரின் பிரதான பொழுது போக்காக இருந்தது அப்போது. அப்படி ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து ஏகப்பட்ட ரசிகைகளை கவர்ந்து இழுத்துள்ளார் இந்த சாந்தகுமார். 

அப்படி இவரின் வீடியோவை பார்த்து அறிமுகமானவர் தான் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமி. வில்லிவாக்கத்தை சேர்ந்த அந்த சிறுமி சாந்தகுமாருடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி, நாளடைவில் காதலாக மாறியது. பழகிய சில நாட்களிலேயே திருமணம் பற்றி பேசும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகவே, ஆசை வார்த்தை கூறி சிறுமியை வீட்டை விட்டு வரவைத்துள்ளார் சாந்தகுமார். காதலனின் வாக்கே வேதம் என கருதிய அந்த அறியாப் பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி காதலனை தேடி ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார். சாந்தகுமாரின் பெற்றோரின் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடந்ததோடு, அகரவரம் மலைமேடு கிராமத்தில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே சிறுமி கர்ப்பமடையவே, குழந்தை இருப்பதை காரணம் காட்டினால் தன் பெற்றோர் ஒத்துக் கொள்வார்கள் என நினைத்த அந்த சிறுமி தன் பெற்றோர் பற்றி கணவனிடம் கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என அப்போதுதான் அறிந்தது போல பேசிய சாந்தகுமார்,   உன்னுடன் வாழ விருப்பமில்லை என கூறியதோடு, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கருக்கலைப்பும் செய்துள்ளார். நடந்த இந்த சம்பவங்களுக்கு எல்லாம் சாந்தகுமாரின் தாய் வளர்மதி, சித்தி செந்தாமரை, மாமா செல்வராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கெல்லாம் உச்சமாக போலி மருத்துவரான பாட்சா பாய் என்பவரிடம் சிறுமியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கருவை கலைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கணவன் வீட்டில் இருந்தும் அன்பு கிடைக்காததால் கடைசியில் சைல்டு லைன் நம்பருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய சமூக  நலத்துறை அதிகாரிகள், ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சிறுமியின் கணவரான சாந்தகுமார், மாமியார் வளர்மதி, கருக்கலைப்பு செய்த மருத்துவர் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீடிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன் பின் அறிமுகமில்லாத ஒருவருடன் பழகி தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இந்த சிறுமியின் வாழ்க்கை இவரைப் போல இணையத்தில் மூழ்கி இருப்போருக்கு ஒரு படிப்பினையும் கூட....

Next Story

மேலும் செய்திகள்