15 வயது சிறுமியை 3 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை : பாட்டியுடன் சண்டை - வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 3 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்த ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
15 வயது சிறுமியை 3 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை : பாட்டியுடன் சண்டை - வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
x
சென்னை அயனாவரத்தில் தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் 15 வயதான சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அவ்வப்போது தன் பாட்டியுடன் சண்டை போடுவது வழக்கம். இதனிடையே கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பாட்டியுடனான சண்டை முற்றவே, வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் அவர். 

எங்கு போவது என தெரியாமல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பது போல நைசாக பேச்சுக் கொடுத்திருக்கிறார் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன். அவரது பேச்சை நம்பிய அந்த சிறுமி, அவருடன் சென்றிருக்கிறார். திருத்தணிக்கு சென்ற பிறகு சிறுமிக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் கொடூரத்தின் உச்சம். 

வீட்டில் சிறுமியை தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் வெங்கடேசன். வீட்டில் தன்னுடைய தாய் இருந்தபோதிலும், எந்த பயமும் இன்றி, சிறுமியை தொடர்ந்து தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெங்கடேசனின் தாய் உள்ளுக்குள் தவித்து வந்துள்ளார். 

இந்த சூழலில்  வேலை விஷயமாக வெங்கடேசன் வெளியூருக்கு சென்றதால், நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த தாய், சிறுமியை காப்பாற்றும் நோக்கி அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுமி சுற்றித் திரிவதை கண்ட ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சிறுமி கூறவே அதிர்ந்து போன ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தந்த வெங்கடேசன் ஆந்திராவிற்கு சென்ற நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி தன் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறி கடைசியில் பாலியல் கும்பலிடம் மாட்டிக் கொண்டார். இதுபோல் சாலைகளில் சுற்றித்திரியும் பிள்ளைகளை குறிவைக்கும் கும்பல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது. 

ஊரடங்கு காலத்தில் சிறுமிகளின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்