சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்
சென்னையில் சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில் சொத்து வரியை உடனடியாக தாமதம் இன்றி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை என்றும் அவர்கள் வேலை, தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்து அச்சத்தில் தவித்து கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய் என்ற காரணம் காட்டி சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என்று சென்னை மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். சொத்து வரி வசூல் அறிவிப்பை சென்னை மாநகராட்சி திரும்ப பெற்று, வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story