சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன்ளான ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசார் விசாரணையில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் தந்தை, மகனை சரமாரியாக அடித்தது, மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க உள்ளதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனடிப்படையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மிக விரைவில் இந்த வழக்கு சிபிசிஐடி வசமிருந்து சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்