கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு அரசு மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்த மருத்துவர் சுகுமாரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 30ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். மேலும், சென்னையில் மாநகர காவல் துறையை சேர்ந்த 2 பேர், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றிய 2 செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட கொரனோ தடுப்பு முன் களப்பணியாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மருத்துவர் சுகுமாரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து தாம் மிகுந்த வேதனைஅடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுகுமாரன் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க சுகாதாரத்துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மருத்துவர் சுகுமாரனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், சுகுமாரனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story