கொரோனா - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

கொரோனா குறித்த விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சம் தேவையில்லை என உறுதி அளித்தார்
கொரோனா - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
x
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். கொரோனா குறித்த தவறான செய்திகள் பரப்பப்படுவதால் பீதி ஏற்படுவதாக அதிமுக உறுப்பினர் பரமசிவம் வேதனை தெரிவித்தார்.

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கி,  கொரோனா குறித்த அச்சத்தை போக்கும் வகையில், திமுக உறுப்பினர் டாக்டர் சரவணன் பேசினார். தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, அரசு தமது முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வேகத்தை விட வதந்தி வேகம் அதிகமாக இருப்பதாகவும் கொரோனா குறித்து, பீதியடைய தேவையில்லை என்றும் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பாதிப்பு இல்லை என்று அரசு சொன்னாலும், பயமாகத்தான் இருக்கிறது என்றும் செல்போனை எடுத்தாலே இருமி கொண்டு கொரோனா என பேசுவதாகவும் விவரித்தார். 
ஏசியில் இருந்தால் கொரோனா பரவும் என கூறப்படுவதால் எம்எல்ஏக்களின் பயத்தை போக்க வேண்டும் என்றும், கொரோனாவால் இடைத்தேர்தல் வர அனுமதிக்கக் கூடாது என்றும் நகைச்சுவையாக வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா பாதித்த ஒருவரை தமிழக மருத்துவர்கள் குணப்படுத்தியதையும்  சுட்டிக்காட்டினார். 

வழக்கமாக சூடான விவாதம் நடைபெறக்கூடிய பேரவையில், கொரோனா பற்றிய விவாதத்தின்போது, பல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்