"பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம்" - ப.சிதம்பரம்

வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் வராததும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் உரையாற்றிய ப.சிதம்பரம், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது என்றார். மின்சாரம், வேளாண்மை, கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஏற்பட்ட சரிவு தான் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார். தொழில் உற்பத்தி குறைந்ததால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது என்றும், இன்றைய நிதி அமைச்சருக்கு பொருளாதாரத்தை பிடித்திருக்கும் நோய் என்ன என்பதே தெரியவில்லை என்றும் ப.சிதம்பரம் சாடியுள்ளார். வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் யாரும் செய்யவில்லை என்பதும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கலவரம், சுதந்திரம் பறிப்பு, குடியுரிமை சட்டம், காஷ்மீர் விவகாரம் இது போன்றவற்றை பார்த்து இந்தியா எங்கே செல்கிறது என உலக நாடுகள் கேள்வி கேட்பதாகவும், அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மை இல்லாத நிலை உள்ளதாகவும் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்