போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் அவலம் - கரூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை
போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் கரூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை தயாரித்தல், விவசாயம் என பல தொழில்கள் நடக்கும் ஒரு மாவட்டமாக திகழ்கிறது கரூர் மாவட்டம். இங்கிருந்து ஜப்பான், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளதால் திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்லும் ஒரு இடமாக கரூர் மாவட்டம் உள்ளது. கரூர் நகரின் மையப் பகுதியில் 1984ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு நாள்தோறும் 2400 பேருந்துகள் வந்து செல்கின்றன.
35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையமானது தற்போது நெரிசலில் சிக்கியிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த தொழிலதிபர் ஒருவர் 12 ஏக்கர் நிலத்தை வழங்கிய பிறகும் இன்னும் அதற்கான எந்த பணியும் எடுக்கப்படவில்லை. இதனிடையே பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் வழக்கு தொடர்ந்த தாரணி கிருஷ்ணன்.
எனவே கரூர் புதிய பேருந்து நிலையத்தை திருமாநிலையூர் பகுதியிலோ அல்லது வேறு இடத்திலோ உடனடியாக கட்டவேண்டும் என்பதே மக்கள் விடுக்கும் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
Next Story
