கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் : தலைமறைவு ஆட்டம் காட்டும் முக்கிய குற்றவாளி

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகார்கள் தொடர்பாக தொடரும் கைது நடவடிக்கைகள், தேர்வாணையத்தை அதிர வைத்துள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் : தலைமறைவு ஆட்டம் காட்டும் முக்கிய குற்றவாளி
x
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றது தொடர்பாக ஜனவரி 30 ஆம் தேதி முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக 13 பேர், குரூப் 4 முறைகேடு தொடர்பாக 16 பேர் என மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ண‌னூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டார். இவர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில், 7 தேர்வர்களிடம் இருந்து 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில், 15 தேர்வர்களிடம் இருந்து தலா 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் சித்தாண்டி மீது குற்றச்சாட்டு உள்ளது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த சென்னை மாநகர ஆயுதபடை காவலர் பூபதி, 5 தேர்வர்களிடம் இருந்து 55 லட்சம் ரூபாய் பெற்று குரூப் 2 தேர்வில் முறைகேடு செய்த‌து தெரிய வந்துள்ளது. தற்போது அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் சிக்கியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள வணிக வரித்துறையில் உதவியாளராக பணியாற்றிய இவர், 9 லட்சம் ரூபாய் கொடுத்து குரூப் 2ஏ தேர்ச்சி பெற்றது  தெரிய வந்துள்ளது. இதேபோல, முறைகேடு தொடர்பாக கைதாகி சிறையில் இருந்த சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த ஓம்காந்தன் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.  இதையடுத்து அவரை சிபிசிஐடி போலீசார், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். முறைகேடாக தேர்வு செய்யப்படுவதற்காக, பல்வேறு நபர்களால் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் பல லட்சம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முறைகேடு செய்து கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிகொண்டு தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்