கல்லூரி மாணவியை காரில் கடத்திய 3 பேர் கைது
சென்னை மாங்காடு அருகே காதலியை பள்ளி மாணவர்கள் உதவியுடன் காரில் கடத்திய காதலன், நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது, காரில் இருந்து ஒரு இளம்பெண் அலறும் சப்தம் கேட்டது.
இதனைக்கண்டதும் அந்த வழியே சென்ற பொதுமக்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, காருக்குள் மூன்று இளைஞர்கள் இருந்த நிலையில், இளம்பெண்ணும் கதறியபடி காருக்குள் இருந்தார். பொதுமக்கள் அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கி பெண்ணை மீட்டனர்.
இதுகுறித்து அவர்கள் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளம்பெண்ணை மீட்டு அந்த மூன்று இளைஞர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, மதனந்தபுரத்தை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவர், பள்ளி நாட்களில் இருந்து அந்த பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது.
அந்த பெண் இவரை, காதலிக்காததால், வலுக்கட்டாயமாக திருமணம் செய்துக்கொள்ள கல்லூரி மாணவர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக 11 ம் வகுப்பு படிக்கும் தனது நண்பர்களான இரண்டு பேரின் உதவியுடன், அந்த பெண்ணை காரில் கடத்திச்சென்றுள்ளார்.
அப்போது கார் பள்ளத்தில் சிக்கியதால் மாட்டி கொண்டதாக
வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடத்தப்பட்ட பெண் மத்திய உளவு பிரிவு ஆய்வாளர் மகள் என்பது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீஸ், மூன்று பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
Next Story

