அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படும் விவகாரம் - தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை
அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாக பிரிக்கப்படும் விவகாரம் குறித்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை ஏற்பதா, வேண்டாமா என தமிழக அரசு இதுவரை முடிவு செய்யவில்லை. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் என 5 அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நிதித்துறை செயலாளர் அடங்கிய குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள், புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்குவது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் இன்று நிகழ்த்திய உரையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும், தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
Next Story

