சட்டப்பேரவை கூட்டத் தொடர் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

2020ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
x
அதில், ஏழை மற்றும் நலிவுற்றோர் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகவும், திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசிடம் இருந்து 17 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மானியம் பெறப்பட்டுள்ளது எனவும்,  மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவை  தொகைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க மத்திய அரசை  தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

நல் ஆளுமை திறனில் தமிழகம் முதலிடம் பிடித்தது பெருமைக்குரிய சாதனை என்றும் விருதுகளை குவித்து, தனித்தன்மையுடன் தமிழகம் விளங்குகிறது எனவும் ஆளுநர் தெரிவித்தார். முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 2017 பிப்ரவரிக்குப் பிறகு வெளியிடப்பட்ட 453 அறிவிப்புகளில் 114 முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டப்பட்டதில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளதாக தெரிவித்த ஆளுநர், திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது என்றும் புகழாரம் சூட்டினார். நிதிநீர் பங்கீட்டில் கேரளாவுடன் பேச்சு நடத்திய முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்த ஆளுநர் புரோகித், முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த மத்திய அரசு மற்றும் கேரளா அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது எனவும், பெண்ணையாற்று படுகையில் நீர்தேக்கம் கட்டும் கர்நாடக அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் உரையில், மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்காக, 563 புள்ளி 50 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக, காவேரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படு​ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் விதமாக, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட ஆந்திர அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள ஆளுர், பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு,  பாராட்டினை தெரிவித்துள்ளார். மேலும்,  திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி மற்றும் முதுநகரில் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசின் பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சர்க்கரை தொழிற்சாலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசு சிறப்பு நிதி சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று தனது உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என ஆளுநர் தெரிவித்தார். தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை குறைக்க 15 புள்ளி 4 கி.மீ. நீளத்திற்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை அரசு அமைக்கும் எனவும் அதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தயாரிக்கும் எனவும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்