நெல்லை: தாமிரபரணி நதியில் சாக்கடை கழிவு

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி கழிவுநீர் கலந்து பொலிவிழந்து கூவமாய் மாறி வரும் அவலம் குறித்த ஒரு செய்தி தொகுப்பு
x
நெல்லை மாவட்டம் பூங்குளம் மலைப் பகுதியில் ஆர்ப்பரித்து தொடங்கும் தாமிரபரணி, 120 கிலோ மீட்டருக்கு பிறகு, பாபநாசம் முதல் சமதள பரப்பில் சலசலத்து பயணிக்கிறது. 

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜீவநதிக்கு நேர்ந்த அச்சுறுத்தல் இருகரையிலும் ஆக்கிரமிப்பு செய்வதால் நாள்தோறும் சுருங்கி வருவதுதான். அதோடு பாவம் போக்கும் பாபநாசம் முதல் தாமிரபரணிக்குள் சாக்கடை கலப்பது சோகத்திலும் சோகம். அமலைச் செடிகள் சீமை கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவுகளும் நிரந்தரமாக ஆக்கிரமித்து உள்ளன. நதியில் குப்பைகளை கொட்டுவது மற்றொரு துயரமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகாபுஷ்கரணிக்கு பிறகு யாரும்  தாமிரபரணியை கண்டு கொள்ள வில்லை என்ற வேதனையும் அப்பகுதி மக்களிடம்  எழுந்துள்ளது. தாமிரபரணி நீர் நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது என்றும் இன்னும் 20 ஆண்டுகளில் நதியின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளதாக நீரியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள் நேரடியாக கலப்பதுதான், மாசு ஏற்பட காரணம் என்கிறது தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்.

மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு, 729 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை அமைத்து வருவதாகவும் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

குமரிக்கண்டம் இருந்த காலத்தில், இலங்கை வரை நீண்டிருந்த வரலாறு கொண்ட தாமிரபரணியின் தூய்மையை நீட்டிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்... 
  
 


Next Story

மேலும் செய்திகள்