தமிழக உள்ளாட்சி தேர்தல் : குலுக்கல் முறையிலும், ஏலத்திலும் தேர்வு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்துள்ள நிலையில், குலுக்கல் முறையிலும், ஏலத்திலும் தேர்வு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான செய்திகளைப் பார்க்கலாம்...
தமிழக உள்ளாட்சி தேர்தல் : குலுக்கல் முறையிலும், ஏலத்திலும் தேர்வு
x
ராமநாதபுரம்


பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டி வேட்பாளர் தேர்வுக்காக மக்கள் நடத்திய தேர்தல் தேர்தல் நடத்திய எட்டு பேர் மீது வழக்கு
வாக்குச்சீட்டு,முத்திரை உள்ளிட்டவை பறிமுதல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணைராமநாதபுரம் மாவட்டம் சுமைதாங்கி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மாதிரி தேர்தல் நடைபெற்றது. 4 பேருக்கு தனித்தனி சின்னம் ஒதுக்கி, வாக்குச்சீட்டு மூலம் கிராம மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த கீழக்கரை வட்டாச்சியர் வீரராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கிருந்த சில்வர் பானை, வாக்குச்சீட்டு, முத்திரையை கைப்பற்றினர். இது தொடர்பாக, அச்சக உரிமையாளர் ராஜா, ஊர்த் தலைவர் முருகேசன், கிராம உதவியாளர் முருகவேல் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 ராமேஸ்வரம் 


ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு 
வேட்பாளரை தேர்வு செய்ய மாதிரி தேர்தல்
மாதிரி தேர்தலை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

இதேபோல், தங்கச்சிமடம்  ஊராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய  பொதுமக்களே மாதிரி தேர்தல் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கச்சிமடம் ஊராட்சி்த் தலைவர் பதவிக்கு ஒரே சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் போட்டியிட்டனர்.  இதனால், 4 பேர்களில் ஒருவரை வேட்பாளராக தேர்ந்து எடுக்க, அந்த சமூகத்தினரே மாதிரி தேர்தலை நடத்தினர். தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பியவர்களின் 
புகைப்படத்தை அச்சடித்து தனியார் திருமண மண்டபத்தில் மாதிரி தேர்தல் நடைபெற்றது. இந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், வாக்குச் சீட்டுகளை கைப்பற்றினர்.


தேனி


தேனி மாவட்டம், ஸ்ரீரங்கபுரம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு குலுக்கல் முறையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். 8 வார்டு உறுப்பினர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிறுமி ஒருவர் குலுக்கலில் சீட் எடுக்க, 8 பிரதிநிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 மன்னார்குடி


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  15 லட்சம் ரூபாய் வரை ஏலம் விடப்பட்ட தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடமேலையூர் கிராமம் கண்டியன் தெரு பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  பதவிக்கு  ஏலம் நடைபெற்றது. இதில், சித்ரா ராமச்சந்திரன் என்பவர் 15 லட்சம் ரூபாய்க்கு பதவியை ஏலத்தில் எடுத்துள்ளார்.  உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு ஏலம் விடுவது குற்றம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, எம்.எல்.ஏ. பரமேஸ்வரி கணவர் முருகன் பெயரில் 14 லட்சம் ரூபாய் ஏலம் போனதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சி தலைவர் பதவிக்கு ரெங்கராஜ் பெயரில் 10 லட்சமும், ஏலம் விடப்பட்டதாக  மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகத்திடம் அப்பகுதியினர் புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில், உரிய விசாரணை  நடத்தி் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டாக்குறிச்சி கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என ஊர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊருக்கு பொதுவான இடத்தில் ஊர் மக்களை அழைத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. பணம் செலுத்தாதவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என ஊர் முக்கியஸ்தர்கள் கூறியதாகவும், புகார் எழுந்துள்ளது. 
Next Story

மேலும் செய்திகள்