2017ல் விடப்பட்ட டெண்டர் நடைமுறைக்கு வராதது ஏன்? - ரூ.10 கோடி வரை கட்டணம் செலுத்திய தமிழக காவல்துறை

தமிழக காவல்துறைக்கு புதிய தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் வாங்க 2017ல் டெண்டர் விடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் அதற்காக 10 கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2017ல் விடப்பட்ட டெண்டர் நடைமுறைக்கு வராதது ஏன்? - ரூ.10 கோடி வரை கட்டணம் செலுத்திய தமிழக காவல்துறை
x
தமிழகத்தில் சென்னை உட்பட இரண்டு முக்கிய நகரங்களில் காவல்துறைக்காக ஆப்கோ எனும் திட்டத்தின் மூலம் புதிய தகவல் தொழில் நுட்ப தளவாடங்கள் வாங்க 86 கோடியே 57 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் வயர்லஸ் கருவிகள், சிசிடிவி, அதிநவீன கேமரா உள்ளிட்டவை வாங்க முடியும். இதேபோல் டிஎம்ஆர் எனும் திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களிலும் டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட கருவிகளுக்காகவும் 57 கோடியே 49 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டமும் 2017 -ல் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால்  மேற்கண்ட இந்த திட்டங்களில் முறைகேடு என லஞ்ச ஒழிப்பு துறை ஒரு பக்கம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் தமிழக காவல் துறை தெரிவித்த விளக்க அறிக்கையில் நடைமுறை தவறுகள் நடந்துள்ளது என ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டங்கள் 3 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் முடியவில்லை எனவும் அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிறைவடையாத இந்த திட்டத்திற்காக தமிழக காவல் துறை அலைக்கற்றை கட்டணமாக 10 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டணம் செலுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறையின் தொழில் நுட்ப பிரிவில் நடைமுறை தவறுகள் நடந்திருப்பதை காவல் துறையே ஒப்புக்கொண்ட நிலையில், முடியாத பணிகளுக்காக இதுவரை 10 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்