மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில், 13 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என பரிசீலித்து தான் முடிவு எடுக்கப்பட்டதா என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
x
கடந்த 1997ஆம் ஆண்டு மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்தார். 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட கோரியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டும், இது சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பரிசீலித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த 13 பேர் விடுதலை தொடர்பாக வழக்கறிஞர் ரத்தினத்தின் மனு எந்த அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதோடு எதிர்தரப்பினரின் கருத்தை கேட்க வேண்டுமென்பதால், விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில், 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்