ஆன்லைனில் தடையின்றி விற்பனையாகும் மாஞ்சா நூல் : உயிருக்கு எமனாகும் காற்றாடி

தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது,  காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.  அவர் தனது மகன் அபினேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பறந்து வந்த ஒரு காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்தது. அலறி துடித்த அவனை  மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் மீண்டும் மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விடுவது சென்னையில் தலைதூக்கியுள்ளதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் சாதாரண நூல் கொண்டு பட்டம் விடும் நிலையில், மாஞ்சா தடவிய நூல் கொண்டு பட்டம் விடும் பழக்கம், வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னை பகுதிகளில் நீடித்து வருகிறது. காற்றாடியில் பயன்படுத்தப்படும் இந்த மாஞ்சாதான் உயிரைப் பறிக்கும் எமனாக உள்ளது. கண்ணாடி துகள், வஜ்ரம், கந்தக துகள் என அனைத்தையும் பொடியாக்கி, பசையுடன் கலந்து நூலில் சேர்ப்பதால் அது அபாயமானதாக மாறிவிடுகிறது. 2006 ஆம் ஆண்டில் கோதண்டராமன், 2007 ஆம் ஆண்டில் 2 வயது சிறுவன் ஒருவன் மாஞ்சா கயிற்றில் பலியாகியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு எழும்பூரில் 4 வயது சிறுமி செரினா பானு மாஞ்சா கயிற்றுக்கு பலியானார்.  2012ஆம் ஆண்டில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பலியானார். அதே ஆண்டில் மெரினா கடற்கரை பகுதியில் 4 வயது சிறுமியும் , வானகரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிரசாத் என்பவரும் உயிரிழந்தனர். 2013ஆம் ஆண்டில், மந்தைவெளி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயகாந்த், பெரம்பூரைச் சேந்த 5 வயது சிறுவன் அஜய் ஆகியோர் உயிரிழந்தனர். 2017 ஆண்டு சிவபிரகாஷ் என்கிற கம்ப்யூட்டர் என்ஜினீயர்,  2018 ஆம் ஆண்டில் கொளத்தூர் வெங்கடேசன் நகரை சேர்ந்த மருத்துவர் சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சிறுவன அபினேஷ்வரன் உயிரிழந்தார். இப்போது,  சென்னை கொருக்குப்பேட்டை சிறுவன் அபினேஷ்வரன் என பலி எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாஞ்சா நூல் கோர்த்த, பட்டங்களைக் கொண்டு போட்டிபோட்டு பட்டங்களை அறுப்பதும், தொலை தூரத்தில் இருந்து  நூலை இழுக்கும் பொழுது சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டு கழுத்து அறுபட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சென்னை மாநகரில் மாஞ்சா காற்றாடி விடக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் காவல்துறை, கைது நடவடிக்கை எடுத்தும் மாஞ்சா காற்றாடி விடுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தடை செய்யப்பட்ட பின்னரும் ஆன்லைன் மூலம் விற்பதும், மக்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் ஒவ்வொருமுறையும் உயிர்பலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது யார்?

உயிர் கொலைக்கு காரணமாகி பழி சுமப்போம் என்பதை மாஞ்சா பிரியர்கள் உணர்ந்தால் மட்டுமே, சிறுவன் அபினேஷ்வரன் போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆழ்துளை கிணற்றில் பலி, தண்ணீர் தொட்டியில் பலி, ஏரி மற்றும் ஆற்றில் பலி, மாஞ்சா காற்றாடியால் பலி என அண்மைக்காலமாக மரணங்கள் குழந்தைகளை துரத்தி வருவதை சாதாரணமாக கடந்துவிட கூடியதா? பெரியவர்களின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும், பொறுப்பற்ற செயலாலும் குழந்தைகள் பலியாகும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.



Next Story

மேலும் செய்திகள்