இளைஞரின் போதை ஆட்டத்தால் ஸ்தம்பித்த கிராம‌ம்

போதை மயக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் செய்த அட்டகாசத்தில், அருகில் இருந்த மக்கள் அனைவரையும் வீடுகளை விட்டு வெளியேறி 4 மணி நேரம் பதற்றத்தில் ஆழ்ந்தனர்.
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் உயிர் அச்சத்தில் பொதுமக்கள் சாலையில் தஞ்மடைந்த காட்சி. அப்படி என்ன நடந்தது? காசிலிங்கம் என்பவரின் மகன் மது போதைக்கு அடிமையான நிலையில், வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், தந்தை மகன் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அருகில் இருந்த மக்களின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. அதிக அளவு மது போதையில் இருந்த கார்த்திக், தந்தையை மிரட்டுவதற்காக சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். மது போதையில் இருப்பதால் செய்வதறியாது செய்துவிடுவாரோ என்கிற பயத்தில் காசிலிங்கம் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இந்த தகவல் பரவ, அக்கம்பக்கத்தினரும் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர், வீட்டினுள் நுழைய முயன்றனர். இதனையறிந்த கார்த்திக், யாராவது வீட்டினுள் நுழைய முயன்றால், சிலிண்டரை வெடிக்க செய்து விடுவேன் என மிரட்ட, தீயணைப்பு துறையினரும் சற்றே தடுமாறினர்.

இந்த நிலையில் திடீரென கார்த்திக், சிலிண்டரில் இருந்து எரிவாயுவை வெளியேற்ற, அக்கம்பக்கத்தில் இருந்த ஒருசிலருக்கும் போலீசார் தகவல் கொடுத்து, உடனடியாக வெளியேற்றினர். அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அய்யம்பாளையம் கிராமத்திற்கு சென்ற பேருந்துகள் அனைத்தும் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்த‌து. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்த, தனது தந்தையை கைது செய்தால் வெளியே வருகிறேன் என்று கிட்டத்தட்ட 4 மணி நேரமாக மிரட்டலை தொடர்ந்துள்ளார் கார்த்திக். இரவு நேரம் ஆகியும் கார்த்திக்கின் மிரட்டல் தொடர்ந்த‌தால், மக்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் கடுமையாக அவதி அடைந்தனர். 

தொடர்ந்து கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்திய, காவல்துறையினர், நைசாக பேசி அவரை  வீட்டின் முன்பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு அவரிடம் தேநீர் கொடுத்த போலீசார், கையை பிடித்து வெளியே தூக்கினர். ஆத்திரத்தில் இருந்த அப்பகுதி மக்கள் கார்த்திக்கை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து கார்த்திக்கை மீட்ட போலீசார் காவல்நிலையம் அழைத்துசென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்