"தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக இயங்குகிறதா?" - நீதிபதிகள் கேள்வி

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக இயங்குகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக இயங்குகிறதா? - நீதிபதிகள் கேள்வி
x
 நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும்  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் கைரேகை பதிவு சிடி-யில் வழங்கப்பட்டிருப்பதாகவும், தங்களுக்கு அசல் கைரேகை பதிவு வேண்டும் என சிபிசிஐடி தரப்பில், தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டு அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் 4 ஆயிரத்து  250 மாணவர்களில் 54 மாணவர்களை தவிர மற்றவர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தேர்வின் போது அரசு மருத்துவ மாணவர்களின்  கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என நாளை தேசிய தேர்வு முகமை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை  சிபிசிஐடி மற்றும் தடயவியல் அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் நேரில் ஆய்வு செய்து அதை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்