நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்

நாங்குநேரி இடைத்தேர்தலில் பல சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
x
7 பிரிவுகளை ஒன்றிணைத்து "தேவேந்திர குல வேளாளர்கள்" என்ற ஒற்றை பெயரின் கீழ் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  நாங்குநேரி தொகுதியின் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். வீடுகளிலும் தெருக்களிலும் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோரிக்கையை நிறைவேற்றுவதாய் உறுதியளித்ததால் வாக்களித்ததாகவும், ஆனால், இந்த முறை புறக்கணிக்கிறோம் என்றும் காரணங்களை அடுக்குகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை அதிமுகவிற்கு விழுந்த வாக்குகள் இந்த முறை விழவில்லை என்றால், அது அதிமுகவை பாதிக்குமா? அல்லது அதிமுக மீதுள்ள அதிருப்தியில் காங்கிரசுக்கு சென்றிருக்க வேண்டிய வாக்குகள் தடுக்கப்படுகிறதா? என்ற இரண்டு கேள்விகளும் இதனால் எழுகிறது. அதே சமயம், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்திருந்தாலும் , அது முழுமையாக நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். புறக்கணிப்பு அறிவித்த சில இடங்களில் கருப்பு கொடிகள் பின்னர் அகற்றப்பட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ளது "பனங்காட்டு படை" கட்சி. இந்தக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் இவர், ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக, காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவருக்கு  செல்லும் வாக்குகள் யாரை பாதிக்கும் என்பது கணிக்க முடியாத விஷயம் என்கின்றனர் தொகுதி மக்கள். இரண்டு பெரும் கட்சிகள் நேரடியாக மோதும் இடைத்தேர்தலை அ.ம.மு.க , மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளே புறக்கணித்துள்ள நிலையில், சுயேட்சையால் தாக்கத்தை ஏற்படுத்த முடியமா என்ற கேள்வியும் எழுகிறது.

2016 சட்டமன்ற தேர்தலில், பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இங்கு போட்டியிட்ட சுரேஷ் என்கிற காசிவேந்தன் 14,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர் பிரித்த ஓட்டுகள் தான் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அப்போது பேசப்பட்டது. அதுபோன்ற தாக்கம் இம்முறை ஏற்படுமா என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், இந்த முறை பார்வர்ட் பிளாக் நேரடியாக களமிறங்காத சூழலில், அந்த 14,000 வாக்குகள் யாருக்கு செல்லும்? என்பதும் தேர்தல் களத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்