சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: மாணவர்கள் உள்பட 8 திபெத்தியர்கள் கைது

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்தியர்கள் 8 பேரை சென்னையில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: மாணவர்கள் உள்பட 8 திபெத்தியர்கள் கைது
x
சீன பிரதமர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் நிகழ்வு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் வருகிற 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்காக, மாமல்லபுரத்தின் நினைவு சின்னங்கள் பொலிவு பெற்றுள்ளதுடன், நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலைகள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்திவரும் போலீசார், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனைக்கு உட்படுத்து வருகின்றனர். சீன பிரதமரின் வருகையையொட்டி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியானதால், சென்னை நகரிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

சீன அரசு திபெத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, வெளிநாடுகளில் வசிக்கும் திபெத் நாட்டினர் சீன அதிபரின் வெளிநாடு சுற்றுப் பயணங்களில்போது  அவருக்கு எதிராக  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், சென்னையில் தங்கியுள்ள திபெத் நாட்டினர் குறித்த விவரங்களை சேகரித்த சேலையூர் காவல்நிலைய போலீசார், கிழக்கு தாம்பரம் பகுதியில் திபெத் மாணவர்களின் அறைகளில் சோதனை செய்தனர்.

அங்கு, சீன அதிபருக்கு  எதிரான போஸ்டர்களை எழுதிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் போராட்டம் நடத்த இருந்ததை உறுதிசெய்த போலீசார், கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, புதுச்சேரி மாநிலம் ஆரோவில் அருகே திபெத் நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரும் சீன அதிபருக்கு சிவப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்ததால், அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். திபெத் மாணவ மாணவிகள் தங்கள் அறைகளில் வெளி நபர்களை  தங்க அனுமதிக்கக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்