திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு-18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகிய இருவரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
x
கடந்த 2ஆம் தேதி இரவு திருச்சியில் பிரபல நகைக்கடையின் சுவரில் துளையிட்டு, உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்களை அள்ளிச் சென்றனர். இந்த பயங்கர கொள்ளை தொடர்பாக  திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.  இந்நிலையில் திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல்துறையினர் மடக்கியபோது ஒருவர் தப்பி ஓடிய நிலையில்  திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சிக்கினார். அவரிடம் இருந்த பையில் திருச்சி பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன. தப்பியோடியவர்  சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் அவர்கள் சேர்ந்தே திருச்சி நகை கடையில் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.   தனிப்படையிடம் சிக்காத கொள்ளையன்  இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் சென்றதால் பிடிபட்டான் என ஹெல்மெட் சோதனையை பாராட்டுவிதமான தகவல் முதலில் பரவியது. ஆனால், அதிரடி திருப்பமாக கொள்ளையரை போலீசார் குறிவைத்து பிடித்ததை திருவாரூர் போலீசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி அம்பலப்படுத்தியது. 
வழக்கமான வாகனச் சோதனையில் சிக்காமல் தலையில் ஹெல்மேட் அணிந்து மணிகண்டனும் சுரேஷூம் இருசக்கர வாகனத்தில் செல்ல சிறிது தூரத்தில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையிலான தனிப்படையினர் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். சுரேஷ் தப்பியோடிவிட, நகைப்பையுடன் மணிகண்டன் சிக்கியுள்ளான். தப்பியோடிய சுரேஷின் உறவினர்களை திருவாரூர் காவல்நிலைத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார்  தாய் கனகவள்ளியை திருச்சிக்கு அழைத்து வந்தனர். 
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருச்சி காஜாமலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும் கனகவள்ளி பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்