'பேனர்' ஜெயகோபால் கைது செய்யப்பட்டது எப்படி?
பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை, ஓசூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற 12 ஆம் தேதி முதல் ஜெயகோபாலை கைது செய்ய ,பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போலீசார், சென்னையில் உள்ள அவரது வீட்டின் கதவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இருந்தும் அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் இது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் போலீசாருக்கு நெருக்கடி அதிகரித்தது. பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு, பெருங்குடி மண்டல உதவி செயற்பொறியாளர் ரவி வர்மன், உதவி பொறியாளர் கமல்ராஜ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயகோபாலை பிடிப்பதற்காக, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 3 தனிப்படையினர் திருச்சி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
இதனிடையே, கடந்த 13ந் தேதி முதல், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, திருச்சி போன்ற பகுதிகளில் மறைந்து இருந்த ஜெயகோபால், 3 தினங்களுக்கு முன் ஒகேனக்கல் சென்றுள்ளார். அதையடுத்து தேன்கனிக்கோட்டைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் மனைவி, மகளுடன் ஜெயகோபால் மறைந்து இருக்கும் தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ஜெயகோபாலை மடக்கி பிடித்து கைது செய்து, சென்னை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயகோபாலிடம் நடைபெற்று வரும் விசாரணைக்கு பின், சுபஸ்ரீ விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story