8 கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு - 27 ஆண்டுக்கு பின்னர் 24 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 1974 முதல் 1984 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 8 கிலோ தங்க அங்கி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 1974 முதல் 1984 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 8 கிலோ தங்க அங்கி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சயன கோலத்தில் உள்ள பெருமாள் சிலையில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1992 ஜூன் 17-ல் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 27 ஆண்டாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 151 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதுடன், 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 34 பேரில் 10 பேர் இறந்துவிட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், ஒரு பெண் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பு அளித்துள்ளார். குற்றவாளிகளில் 8 பேருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 பேருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், 14 பேருக்கு அபராதமும் விதித்துள்ள நீதிபதி, கட்டத் தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
Next Story