நடு ரோட்டில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்... காக்கிச் சட்டைக்குள் மிளிர்ந்த மனித நேயம்

சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிக்கு பெண் காவல் ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பானுமதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கணவரும் இரவு பணிக்காக சென்றதால், துணைக்கு யாரும் இல்லாமல் தவித்துள்ளார். வேறு வழி இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு தனியாகவே செல்ல தீர்மானித்து, அதிகாலை 3 மணி அளவில், வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அதற்குள், பனிக்குடம் உடைந்ததால், நிலை தடுமாறி சூளைமேடு நெடுஞ்சாலையில் விழுந்து விட்டார், பானுமதி.

உதவிக்கு யாருமின்றி நடுரோட்டில் பானுமதி தவித்தபோது, கடவுள் போல வந்து கை கொடுத்துள்ளார், அந்த வழியாக ரோந்து சென்ற பெண் காவல் ஆய்வாளர் சித்ரா. நடுரோட்டில் கிடந்த பானுமதியின் நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா, சுற்றிலும் பார்த்தபோது, குப்பை சேகரிக்கும் மூதாட்டி ஒருவர் கண்ணில் பட்டுள்ளார். உடனே, அந்த மூதாட்டியை அழைத்து வந்து, நடுரோட்டிலேயே பானுமதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில், பானுமதிக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, 108 ஆம்புலன்சை அழைத்து, தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார், சித்ரா. பெண் காவல் ஆய்வாளரின் இந்த மனித நேயமிக்க செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்