லண்டனை தொடர்ந்து நியூயார்க்கில் முதலமைச்சர்....

14 நாட்களுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் பயணம் செய்து வருகிறார்.
லண்டனை தொடர்ந்து நியூயார்க்கில் முதலமைச்சர்....
x
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு, மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை விமான நிலையத்தில், அ.தி.மு.க.வினர் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வழியனுப்பினர். ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலையில் முதலமைச்சர் பழனிசாமி லண்டன் சென்றடைந்தார். 4 நாட்கள் பயணத்தில், லண்டனில் உள்ள ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்ட முதலமைச்சர், கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கையொப்பமிட்டார். இதை தொடர்ந்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சஃபோல்க் நகருக்கு சென்ற அவர், அங்கு யுகே பவர் நெட்ஒர்க்ஸ் என்கிற மின்சார வழங்கல் நிறுவனத்தை பார்வையிட்டார். இதை தொடர்ந்து லண்டனில் உள்ள 'கேஇடபிள்யூ' தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். லண்டனில் 4 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர், செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சரை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இதையடுத்து விமானம் மூலம் பஃபல்லோ நகருக்கு சென்ற  முதலமைச்சர் பழனிசாமி, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்காவிற்கு தேவைப்படும் தொழில் நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சர் பஃபல்லோ நகரத்தில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் சென்றடைந்தார். இந்நிலையில் இன்று, அமெரிக்காவில் தொழிலதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். இதையடுத்து செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதலமைச்சர், செப்டம்பர் 8, 9 தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதை தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்புகிறார். 

Next Story

மேலும் செய்திகள்