முக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா?

இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.
x
இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. விழுப்புரத்தில் நள்ளிரவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 64 இடங்களில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கார், பேருந்துகளில்  வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதேபோல் கோவையில் காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், உள்ளிட்ட பல  பகுதிகளில் போலீசார் நேற்றிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பேருந்து ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. கோவை -கேரள எல்லையில் பலத்த சோதனைக்கு பின்பே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கோவையில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாகை வேளாங்கண்ணியில் ஏராளமான சிறப்பு அதிரடிப் படை குவிக்கப்பட்டனர்.  தஞ்சையில் இருந்து 3 டிஎஸ்பிகள் மற்றும்  6 காவல் ஆய்வாளர்கள்  தலைமையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்றிரவு ,  தனியார் மற்றும் பேராலய விடுதிகளிலும், பேருந்து மற்றும் ரயில் நிலைத்திலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்ட கடலோர எல்லை பகுதியில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடங்க உள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல் சென்னையில்  நேற்றிரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியும் மேற்கொண்டனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்று நள்ளிரவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்