ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது
x
கடந்த 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை பெறுவதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீட்டில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம், அவரை கைது செய்ய பலமுறை தடை விதித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக,  நேற்று முன்தினம் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அவரிடம் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. களமிறங்கியது. டெல்லியில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால், அவரை தேடி பலமுறை சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முறையிட்டார். அந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ரமணா, சந்தன கவுடா, அஜய் ரஸ்தோகி அமர்வு நிராகரித்துவிட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரம் எங்கே என்ற கேள்விக்கு நேற்று இரவு விடை கிடைத்தது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு திடீரென வந்த ப.சிதம்பரம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தம் மீது சிபிஐயோ, அமலாக்கத்துறையோ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என அவர் தெரிவித்தார். பொய்யர்களால், பொய் பிரசாரம் செய்யப்படுகிறது எனவும் ஆவேசமாக பேசினார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நானோ, எனது குடும்ப நண்பர்களோ, குற்றஞ்சாட்டப்படவில்லை. அமலாக்கத்துறையோ, அல்லது சிபிஐயோ, எங்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. செய்தியாளர்களை சந்திப்பை முடித்துக்கொண்ட சிதம்பரம் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றார். அவருடன் மூத்த வழக்கறிஞர்கள் அபிசேக் சிங்வி, கபில் சிபல் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் மூடப்பட்டன. இதனால், சிபிஐ  அதிகாரிகள்,  சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் வீட்டிற்குள் சென்றனர். ப.சிதம்பரம் வீட்டினுள் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்ததை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தை அழைத்து சென்ற போது காரை மறித்து அவர்கள் முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாகவும், சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவி​க்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் இருந்த ப.சிதம்பரம், 24 மணி நேரத்திற்கும் மேலாக தேடப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்