நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன?

நெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் ? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
x
நெல்லை மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினரின் வீட்டில் கடந்த 11-ம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சண்முகவேல் செந்தாமரை தம்பதியர் துணிச்சலோடு எதிர்கொண்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

அப்போது செந்தாமரையின் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக கூறப்பட்டது. கொள்ளையர்களை தைரியமாக விரட்டியடித்ததற்காக இருவருக்கும் அதீத துணிவுக்கான விருது அரசின் சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இதுவரை எட்டப்படவில்லை. 

கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தியும், கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்த நேரம் மற்றும் தேதியும், கேமராவில் உள்ள நேரம் மற்றும் தேதியும் முரணாக இருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கொள்ளை நடந்த வீடு தோட்டத்துடன் சேர்ந்த இடம் என்பதால் இங்கு 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. ஆனால் 2 கேமராக்கள் மட்டும் இயங்குவதால் அதன் பதிவுகள் மட்டுமே போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற கேமராக்களின் பதிவுகள் எங்கே என்ற கேள்வியும் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கேமராக்களின் பதிவுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பதிவுகளை யாரோ ஒருவர் இயக்கியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் செந்தாமரையின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் அதுதொடர்பான சிசிடிவி காட்சி எங்கே ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சண்முகவேலின் வீட்டில் நாய் இருந்தபோதும், கொள்ளையர்கள் வந்த போது அது குரைக்காதது ஏன்? என்ற கேள்வி இங்கே பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை நாய்க்கு நன்கு பழகியவர்களாக, தெரிந்தவர்களாக இருக்கும்பட்சத்தில் நாய் குரைக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த காரணத்தை அடிப்படையாக வைத்து நெருங்கிய உறவினர்களை போலீசார் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சண்முகவேலின் மகன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உண்மையாகவே இந்த கொள்ளை சம்பவம் நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர்களை மிரட்டுவதற்காக ஜோடிக்கப்பட்ட நாடகமா? என்ற கேள்வியும் தனிப்படை போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களின் வீட்டில் ஏற்கனவே 3 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகவும் போலீசாரிடம் சண்முகவேல் தம்பதியர் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான ஆதாரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர். 

இந்த கொள்ளை சம்பவத்தில் தங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என உறவினர்கள் சிலர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. கல்யாணிபுரத்தில் சண்முகவேலின் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஒருவரின் வீட்டில் சம்பவத்தன்று துப்பாக்கி ஒன்று மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் துப்பாக்கியை திருடிச்சென்றவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் இதுபோன்ற பல சந்தேகங்கள் பிரதானமாக இருப்பதால் கொள்ளையர்களை நெருங்குவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்