அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
x
அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 16ந் தேதி வரை, வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

31 நாட்கள் சயன கோலத்திலும், 16 நாட்கள் நின்ற கோலத்திலும், விதவிதமான அலங்காரத்தில் காட்சி அளித்த அத்திவரதரை, அதிகாலை முதல் இரவு வரை  பக்தர்கள் தரிசித்தனர். அத்திவரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் குவிந்ததால், காஞ்சிபுரம் திணறியது. கடைசி நாளில் அதிகாலை 2.30 மணி வரை அத்திவரதரை பக்தர்கள் தரிசித்தனர்.  மொத்தம் ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பக்தர்கள், அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

48வது நாளான நேற்று காலை அத்திவரதரும், உற்சவரும் வசந்த மண்டபத்தில் எதிர் சேவை செய்தனர். முன்னதாக அத்தி வரதருக்கு 32 வகையான பலகாரங்கள்  நெய்வேத்தியம் செய்யப்பட்டன. தொடர்ந்து பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், உள்ளிட்ட தைலக்காப்பும், சந்தனாதி தைலம், சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களும், அத்திவரதர் மீது பூசப்பட்டது. குளத்தில் அத்திவரதர் சிலையை மீன்கள், பாம்புகள்  நெருங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.  
பின்னர் வேட்டு சத்தங்கள் முழங்க, வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளம் நோக்கி அத்திவரதர் எழுந்தருளினார்.

2059-ல் மீண்டும் மக்களுக்கு காட்சி தருவார் அத்திவரதர்

அத்திவரதரை காவல் காக்கும் நாக தேவர்கள் உள்ள தண்ணீர் வற்றாத அனந்தசரஸ் குளத்தில் இரவு 11.55 முதல் 12.10 மணிக்குள் அத்திவரதர் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார். ஆகம விதிப்படி, அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தின் கீழ் உள்ள அறையில்  வைக்கப்பட்டுள்ள அத்திவரதர், 2059-ம் ஆண்டு மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

Next Story

மேலும் செய்திகள்