மேட்டூர் அணை திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரைகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு, அறிவுரைகள் வழங்கியுள்ளது.
மேட்டூர் அணை திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரைகள்
x
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சுமார் 2 புள்ளி 25 லட்சம் கன அடியாக உயரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோர மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும்  ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அறிவுறுத்தியுள்ளார்.

இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட 12  மாவட்டங்கள் உள்ளடங்கும். 

இந்த மாவட்டங்களில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என்றும் ஆற்றின் அருகே  செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கால்வாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் பாலத்தின் அடியில் ஏற்படும் அடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருக்கும் மின்கம்பங்களை பாதுகாக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை மிகுந்த கவனத்துடன்  கண்காணிக்குமாறும் நீர்நிலைகளை கடக்கும் கால்நடைகளை பாதுகாப்பதில் கவனம் தேவை எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வதந்திகளால் பொதுமக்களிடையே  எவ்வித அச்சமும் ஏற்படாதிருக்க மாவட்ட ஆட்சியர்கள் உரிய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்