எகிறும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி...

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
x
அன்றாட பயன்பாட்டிற்கும் முதலீடு செய்யவும் தங்கம் ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறியிருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தை வாங்க பொதுமக்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 1ஆம்  தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ஆயிரத்து 78 ரூபாயாக இருந்தது. அப்போது ஒரு சவரன் தங்கம் 24 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூன் 25ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3 ஆயிரத்து 308 ஆக இருந்தது. அப்போது ஒரு சவரன் தங்கமானது 26 ஆயிரத்து 464 ரூபாயை தொட்டது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு படிப்படியாக குறைந்தது. மாதத்தின் துவக்கத்தில் கிராம் 3212க்கு விற்பனையாகி ஒரு சவரன் 25, 696 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து வந்த முகூர்த்த நாட்கள் காரணமாக தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் தங்கத்தின் தேவையும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மாதத்தின் இறுதி நாளான 31ஆம் தேதி ஒரு கிராம் 3 ஆயிரத்து 338 ஆக உயர்ந்து ஒரு சவரன் 26 ஆயிரத்து 704 ரூபாயை தொட்டது. ஆனால் கடந்த 3 ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 416க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு சவரன் 27 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 3547 ஆக உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 376 ஐ தொட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3571 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயரும் என வியாபாரிகள் கூறியுள்ள நிலையில் விரைவில் 30 ஆயிரம் ரூபாயை தொடும் என்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்