நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அதிகாரிகளின் மெத்தன போக்கே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
x
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியில் குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதனை அகற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த வீரமலை மற்றும் நல்லதம்பியை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்தனர். பொதுநல வழக்கிற்கு உதவியதற்காக கொலை செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த சம்பவத்தில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலையானவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு, அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அவை முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின்  மெத்தன போக்கே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும், நிறைவேற்றப்படாத உத்தரவுகளின் கீழும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் நினைவூட்டுகிறது என தெரிவித்தனர். இந்த வழக்க குறித்து கரூர் மாவட்ட டி.எஸ்.பி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்