கர்ப்பிணி பிரசவத்திற்கு உதவிய பெண் காவலர் - குவியும் பாராட்டு

சென்னையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர், கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் தியாகு, ஷீலா தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான ஷீலாவிற்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாயார், ஷீலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்தவாறே கே.ஹெச். சாலையோரம் பதற்றத்துடன் நின்றுள்ளார். இரவு நேரம் என்பதால், வாகனங்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. 

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி, அவரிடம் விசாரித்துள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட ராஜேஷ்வரி, உடனே ஷீலாவின் வீட்டுக்கு சென்றதுடன், அங்கிருந்து 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

சுமார் அரைமணி நேரம் ஆகியும், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், சற்றும் யோசிக்காமல் ரோந்து வாகனத்திலேயே ஷீலாவை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார், ராஜேஷ்வரி. அவருக்கு உதவியாக ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் ஊரக காவலர் ராஜசேகர் ஆகியோர் இருந்துள்ளனர். 

இதனிடையே, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், அழைப்பின் பேரில் எதிரே வந்த 108 ஆம்புலன்சை நிறுத்தி, ஷீலாவை அதில்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார், ராஜேஷ்வரி. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு, அதிகாலை 3.30 மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய, பெண் காவலரின் மனிதநேயம் மிக்க இந்த செயலை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்