யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும்

தமிழகத்தில், யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
x
இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில் மலேரியா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கம்போடியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் யானைக்கால் நோயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில், இவ்வகை நோய்கள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. யானைக்கால் மற்றும் மலேரியா நோய்களை ஒழிப்பதில் தமிழகம் முன்ணணி மாநிலமாக உள்ளது. கொசுக்கள், உண்ணிகள் போன்ற பூச்சிகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் உலகமெங்கும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2017ஆம் ஆண்டில், 8 லட்சத்து 42 ஆயிரத்து 95 பேர் மலேரியா நோய் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 996 பேர் டெங்குவினாலும், 63 ஆயிரத்து 679 பேர் சிக்குன் குனியா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகெங்கிலும் ஆண்டுக்கு 9 கோடியே 60 லட்சம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதாகவும், 2017ல் உலக அளவில், 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் மலேரியாவால் உயிரிழந்திருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நோய் பரப்பிகள் மூலம் பரவும் 12 முக்கியமான, நோய்களால், உலக மக்கள் தொகையில், 80 சதவீதத்தினர் பாதிக்கப்படுவதாகவும், உலகெங்கும், வருடத்திற்கு ஏழு லட்சம் மக்கள் இந்த நோய்களுக்கு பலியாவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 
டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை ஒழிக்கும் முயற்சியில், தமிழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், 2020க்குள் யானைக்கால் நோயும்,  2022ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோயும் முற்றிலும் ஒழிக்கப்படும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்