தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
x
'அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 16 பேரை டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். அவர்கள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அந்த16 பேரின் வீடுகளிலும் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள தௌபிக் முகமது வீட்டில்  3 பேர் கொண்ட என்.ஐ. ஏ. அதிகாரிகள் குழு, காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள முகம்மது இப்ராஹிம்  வீட்டிலும், 10 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. இதையொட்டி உள்ளுர் போலீசார் 200 க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை நரிமேட்டில் உள்ள முகமது ஷேக் மொய்தீன் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள், காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது உறவினர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தேனி அருகே உள்ள கோம்பையில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டில், அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த  ரபி அகமது, பைசல் ஷெரீப், முந்தாசீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோரது வீடுகளிலும்,  வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் இல்லத்திலும் என்ஐஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்