15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் கடந்த 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உற்சவம் துவங்கி நேற்று வரை கடந்த 14 நாட்களில் 17 லட்சத்து 65 ஆயிரம் பேர் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 15 வது நாளான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இன்றைய தினம் நீலம் மற்றும் பச்சை பட்டு உடுத்தி, பஞ்ச வர்ண மாலை அணிந்து அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

15 வது நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜா அத்தி வரதரை தரிசனம் செய்தார். கூட்ட நெரிசல் ஒரு பக்கம் இருந்தாலும் முதியவர்கள், கை குழந்தைகளுடன் உள்ள பெண்கள் , கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இருசக்கர வாகனத்தில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் நடமாடும் ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து  செல்வதற்காக கூடுதல் பேருந்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது... 

கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அத்தி வரதர் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்