முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' இணையதளம்" : விதி எண்110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற இணையதளம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே இணையதளம் : விதி எண்110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
x
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற இணையதளம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர், கோவையில் ஐ.டி நிறுவன தேவைக்காக 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டட வளாகம் அமைக்கப்படும் என்றும் கூறினார். குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை பெருக்க வழங்கப்படும் மானியம் 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். அரசின் தரவுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

மக்களவை தேர்தல் வெற்றி...தோல்வி  : அ.தி.மு.க., தி.மு.க இடையே திடீர் விவாதம் 

பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

சட்டப்பேரவையில், கைத்தறி, கதர்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்றும், ஆளும் கட்சி ஒரே ஒரு தொகுதியி்ல் மட்டுமே வெற்றி பெற்றது எனவும் கூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்  இழந்த தி.மு.க, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக விமர்சித்தார். குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தேர்தல் வரலாற்றில், அதிக முறை தோல்வி கண்ட ஒரே கட்சி தி.மு.க தான் என்றார். தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் அந்த அளவுக்கு பணம் எங்கே இருக்கிறது எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். தேர்தல் தோல்வி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், உறுப்பினர் சுந்தர் இடையே ஏற்பட்ட காரசார வாதம், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. 

வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம் : பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

அலங்காநல்லூர், வாடிப்பட்டி குடிசை வாழ் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டிக் கொள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் 619 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 65 வீடுகள் கட்டும் பணி முழுமை பெற்ற நிலையில், மேலும்,  554 வீடுகள் கட்டப்படுவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். 


ரூ.23.30 லட்சம் செலவில் சமுதாயக் கூடம் : உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பதில்

திருவாடானை தொகுதிக்கு உள்பட்ட வரவணி கிராமத்தில், 23 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாய கூடம் அமைக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார். அந்த தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து மக்களும் அங்கு வசிப்பதால் சமுதாயக் கூடம் அமைப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


கிராம உதவியாளர்களுக்கான பதவி உயர்வு : பேரவையில் அமைச்சர் உதயகுமார் விளக்கம்

கல்வி தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார். தி.மு.க உறுப்பினர் ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணி இடங்களில் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஓய்வுபெற்ற ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை இடம் மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பதிலளித்தார். 

கொடியம்பாளையம் தீவு கிராமம் : சுற்றுலா துறை அமைச்சர் உறுதி

சீர்காழி வட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். சீர்காழி தொகுதி உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  படகு குழாமுடன் சுற்றுலா தளமாக அமைக்க பொதுப்பணி, சுற்றுலா மற்றும் வனத்துறைகளுடன் ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, விளக்கம் அளித்தார். 



Next Story

மேலும் செய்திகள்