ட்ரோன் மூலம் மல்லிகை செடிக்கு பூச்சிமருந்து - விவசாயிகள் மகிழ்ச்சி

மல்லிகை பூச்செடிக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிக்கும் நவீன முறையால் சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில்  25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை செடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மல்லிகை செடிகளுக்கு நோய் தாக்குதல் அதிகம் என்பதால் அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் என்பதுடன், அதை  தெளிப்பதற்கு அதிக செலவும், கால விரயமும் ஏற்படுவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்தி தோட்டப்பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதை அறிந்த விவசாயிகள், விவசாய நிலங்களுக்கும் அதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பவர் ஸ்பிரேயர் மூலம் ஒரு நாளில்  2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே பூச்சி மருந்து தெளிக்கமுடியும் என்கிற நிலையில், ட்ரோன் மூலம் ஒரு நாளில் 40 ஏக்கர் வரை தெளிக்கலாம் என்பதால், மருந்து  தெளிக்கும் செலவு பாதியாக குறைவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த முறையில்,  நெல், கரும்பு, மல்லிகை, கத்தரி, மாமரம்,  மக்காச்சோளம், பருத்தி என அனைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி மருந்து தெளிக்க முடியும் என்கிறார் இந்த இயந்திரத்தை வாடகை அடிப்படையில் இயக்கிவரும் பிரகாஷ் மாணிக்கம். கருவியின் விலை 10 இலட்சம் ரூபாய் என்பதால் அரசு கொள்முதல் செய்து தோட்டக்கலைத்துறை மூலம்  மானிய விலையில் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்