நீட் விலக்கு பெற்றுவிடுவோம் என வாக்குறுதி அளிக்க வேண்டாம் - அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு ஆஜரான தமிழக அரசு, நீட் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய இரண்டு வாரகாலம் அவகாசம் கோரியது. வாதங்களை கேட்ட நீதிபதி கிருபாகரன், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றும், விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால், அதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார். கல்வியில் முன்னேறாத மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்கும் நிலையில், அதில், சிறந்து விளங்கும் தமிழகம் விலக்கு கோருவதாகவும் அவர் தெரிவித்தார். நீட்தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதற்கு, 9 மற்றும்11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நேரடியாக நடத்துவதே காரணம் என்று கூறிய நீதிபதி கிருபாகரன், விசாரணையை 2 வாரகாலம் ஒத்திவைத்தார்.
Next Story

